Diet Schedule for Weight Loss in Tamil
யாருக்கு தான் தொப்பையில்லாத வயிறு வேண்டுமென்ற ஆசை இருக்காது. இப்படியொரு ஆசை வருவதற்கு தற்போதைய உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான் காரணம். நம்மை ஜங்க் உணவுகள் சூழ்ந்து இருக்கும் இக்காலத்தில் நாவை அடக்கி எடையைக் குறைப்பது என்பது சற்று கடினமான ஒன்று தான்.
அதிலும் இந்தியர்களான நமக்கு வாய்க்கு ருசியாக சாப்பிட்டு பழக்கம் இருப்பதால், வயிற்றைக் காய போட்டு எடையைக் குறைக்க முயற்சிப்பது மிகவும் கடினமாகத் தான் இருக்கும். உங்களால் கடினமான டயட்டைப் பின்பற்ற முடியாதா? அப்படியானால் இந்தியர்களுக்கு ஏற்ற டயட் திட்டம் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கீழே 2 வார இந்தியன் டயட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டயட்டை ஒருவர் 2 வாரம் வெற்றிகரமாக பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். சரி, இப்போது 2 வாரத்தில் எடையைக் குறைக்க உதவும் இந்தியன் டயட் திட்டம் குறித்து காண்போமா!
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் வாரம்
இந்தியன் டயட்டின் முதல் வாரம் மேற்கொள்ளப்படும் டயட் சற்று கடுமையாகத் தான் இருக்கும். ஏனெனில் வழக்கமாக பின்பற்றும் பழக்கவழக்கங்களில் திடீரென்று மாற்றத்தைக் கொண்டு வரும் போது, அது சற்று சிரமமாகத் தான் இருக்கும். இருப்பினும் இந்த டயட் திட்டத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளவை அன்றாட உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்தவைகள் என்பதால், உடலுக்கு எவ்வித தீங்கும் நேராது.
அதிகாலை பானம்
முதல் வாரம் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும். அதிலும் அத்துடன் 1/2 ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்த்து கலந்து குடித்தால், உடல் எடை இன்னும் வேகமாக குறையும்.
காலை உணவிற்கு முன்
காலையில் ஜூஸ் குடித்த பின், 1 மணிநேரம் கழித்து 5-6 பாதாமை சாப்பிட வேண்டும். 20 நிமிடம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் பாதாமில் உள்ள நார்ச்சத்து, அதிக பசியைக் கட்டுப்படுத்தி, உண்ணும் போது அளவாக சாப்பிட உதவி புரியும்.
காலை உணவு
இந்தியன் டயட்டின் முதல் வாரத்தில் காலை உணவாக கீழ்கண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அவையாவன:
* 2 கோதுமை பிரட்
* 2 வேக வைத்து முட்டையின் வெள்ளைக்கரு
* 1 டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால்
இந்த காலை உணவு போதுமான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும். மேலும் உடலில் கலோரிகள் சேர்வதைக் குறைக்கும்.
மதிய உணவிற்கு முன்
காலை உணவை 9 மணிக்கு எடுத்திருந்தால், 11 மணி அளவில் ஸ்நாக்ஸ் போன்று எதையேனும் சாப்பிடுங்கள். அதுவும் பழங்களைக் கொண்டு சாலட் செய்து உட்கொள்வது நல்லது. ஆனால் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது. இப்படி சீரான இடைவெளியில் உணவை உட்கொள்ளும் போது, அடிக்கடி ஏற்படும் பசியுணர்வு தடுக்கப்படுவதோடு, உட்கொள்ளும் கலோரிகளின் அளவும் குறையும்.
மதிய உணவு
மதிய உணவு உண்பதற்கான சரியான நேரம் 1-1.30 வரை ஆகும். மதிய உணவின் போது கீழே கொடுக்கப்பட்ட பட்டியலை உட்கொள்ள வேண்டும். அவையாவன:
* பாதி தட்டு வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், பீட்ரூட் கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட்டில் ஆப்பிள் சீடர் வினிகரை லேசாக தெளித்து, சாப்பிட வேண்டும். முக்கியமாக உப்பு சேர்க்கக்கூடாது. ஏனெனில் உப்பு உடலில் நீர்த்தேக்கத்தை உண்டாக்கி, உடல் பருமனை அதிகரிக்கும்.
* 1/2 கப் சாதம்
* 1/2 கப் தால்
* 1/2 பௌல் வேக வைத்த காய்கறிகள்
* 1 லேசாக வறுக்கப்பட்ட மீன்
மாலை வேளை
மாலையில் சுமார் 4 - 4.30 மணியளவில், புத்துணர்ச்சியூட்டும் வகையில் ஒரு கப் டீ குடிக்கலாம். ஆனால் அதில் பால் அல்லது சர்க்கரை சேர்க்கக்கூடாது. அத்துடன் 2 க்ரீம் கிராக்கர் பிஸ்கட்டுக்களை சாப்பிடலாம்.
இரவு உணவிற்கு முன்
இரவு 7 மணியளவில் 1/2 கப் முளைக்கட்டிய கொண்டைக்கடலையில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து சாப்பிடலாம் அல்லது 1/2 பௌல் வெஜிடேபிள் சூப்பில் மிளகுத் தூள் மற்றும் இஞ்சி அதிகமாக சேர்த்துக் குடிக்கலாம். இதனால் மிளகில் உள்ள பெப்பரின் கொழுப்புக்களை வேகமாக கரைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
இரவு உணவு
முதல் வாரத்தின் இரவு நேரத்தில் 8.30 மணியளவிலேயே இரவு உணவை முடித்துவிட வேண்டும். மேலும் இரவு உணவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை தான் உட்கொள்ள வேண்டும். அவையாவன:
* 1/2 கப் சாதம் / 1 சப்பாத்தி
* 1/2 பௌல் வேக வைத்த காய்கறிகள்
இரவு உணவிற்கு பின்
இரவில் தூங்கும் முன் பானத்தை குடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதிலும் தூக்கத்திலும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகமாக வைத்திருக்க உதவும் பானங்களைக் குடிக்க வேண்டியது முக்கியமாகும். இதனால் சீக்கிரம் உடல் எடையைக் குறைக்கலாம். அதற்கு முதல் வாரத்தில் 1/2 ஸ்பூன் கற்றாழை ஜூஸ் உடன், 1 எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, 1/2 ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும்.
இரண்டாம் வாரம்
முதல் வார டயட்டைப் போன்று தான் இரண்டாம் வார டயட்டும் இருக்கும். இப்போது உடலானது முதல் வாரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றியிருக்கும். ஆகவே இரண்டாம் வார டயட்டை எளிதில் பின்பற்ற முடியும். இதனால் விளைவாக உடல் எடையை வெற்றிகரமாக பக்கவிளைவுகளின்றி குறைத்துக் காட்ட முடியும். சரி, இப்போது இரண்டாம் வார டயட் என்னவென்று காண்போம்.
அதிகாலை பானம்
இரண்டாம் வாரத்தில் அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும். இதனால் உடலுக்கு ஆற்றல் கிடைப்பதோடு, உடலின் மெட்டபாலிசமும் ஊக்குவிக்கப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரைய ஆரம்பிக்கும்.
காலை உணவு
இரண்டாம் வாரத்தில் காலை உணவிற்கு முன் எதையும் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக காலை உணவையே சாப்பிடலாம். ஆனால் இந்த வாரத்தில் காலையில் அதிகமாக சாப்பிட வேண்டும். அவை என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
* 2 சப்பாத்தியுடன் புளித்த தயிர் ஒரு கப்
* 2 வேக வவைத்த முட்டையின் வெள்ளைக்கரு
* ஏதேனும் ஒரு விருப்பமான பழம் (வாழைப்பழத்தை தவிர்த்து)
இந்த காலை உணவால் வயிறு நிறைவதோடு, நாள் முழுவதும் வேண்டிய ஆற்றலும் கிடைக்கும்.
மதிய உணவிற்கு முன்
காலை உணவு முடிந்து 2 மணிநேரத்திற்குப் பின், கேல், பாகற்காய் மற்றும் வெள்ளரிக்காயால் தயாரிக்கப்பட்ட காய்கறி ஸ்மூத்தியை ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். அத்துடன் வேண்டுமானால் அன்னாசி ஸ்மூத்தியையும் கலந்து கொள்ளலாம். ஆனால் இவற்றில் சுவைக்காக உப்பு அல்லது சர்க்கரை எதுவும் சேர்க்கக்கூடாது. வேண்டுமானால் 1 ஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகுத் தூள் கலந்து கொள்ளலாம்.
மதிய உணவு
மதிய உணவானது 1 மணியளவில் இருக்க வேண்டும். இந்த வாரத்தில் மதிய வேளையில் கீழ்கண்ட உணவுகளைத் தான் சாப்பிட வேண்டும். அவையாவன:
* 1/2 கப் வெஜிடேபிள் உப்புமா
* 1/2 தட்டு பழங்களால் தயாரிக்கப்பட்ட சாலட் சாப்பிட வேண்டும். ஆனால் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது. வேண்டுமானால் சுவைக்காக ஆப்பிள் சிடர் வினிகரை சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
மாலை வேளை
மாலையில் 4 மணியளவில் எலுமிச்சை சேர்த்த ஒரு கையளவு வேக வைத்த கொண்டைக்கடலை அல்லது சோளம் சாப்பிடலாம். வேண்டுமானால் ஒரு கப் பால், சர்க்கரை சேர்க்காத டீ குடிக்கலாம்.
இரவு உணவு
இரண்டாம் வாரத்தில் இரவு உணவை 7 மணியளவிலேயே சாப்பிட வேண்டும். அதுவும் ஒரு பௌல் வெஜிடேபிள் சாலட் தயாரித்து சாப்பிட வேண்டும். அதுவும் அதில் வேக வைத்த ப்ராக்கோலி, கேரட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்றவை இருக்க வேண்டும். அத்துடன் ஒரு வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கருவையும் சாப்பிட வேண்டும்.
இரவு உணவிற்கு பின்
7 மணிக்கு இரவு உணவை உட்கொண்டால், ஒரு 8 மணியளவில் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். பின் 2-3 மணிநேரம் கழித்து தான் உறங்க செல்ல வேண்டும். இதை மறக்காமல் நினைவில் கொள்ளுங்கள்.
இரவு பானம்
இரவில் தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 1 ஸ்பூன் கற்றாழை ஜூஸில், 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் மேம்படுத்தப்படும்.
எப்போதுமே வயிறு நிறைய உணவு சாப்பிட்டதும் உறங்க செல்லக்கூடாது. குறைந்தது 3 மணிநேரம் இடைவெளி விட வேண்டியது அவசியம். இதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.
அதிக நீர்
என்ன தான் டயட்டை மேற்கொண்டாலும் நாள் முழுவதும் குடிக்கும் நீரின் அளவை மட்டும் குறைத்துவிடாதீர்கள். டயட் என்பது உண்ணும் உணவிற்கு மட்டும் தானே தவிர, குடிக்கும் நீருக்கு அல்ல. சொல்லப்போனால் எவ்வளவு நீர் நாம் குடிக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் உடல் எடையைக் குறைக்கலாம். ஏனெனில் நீர் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவி புரியும்.
உடற்பயிற்சி
எவ்வளவு தான் டயட்டை பின்பற்றினாலும், தினமும் குறைந்தது 45 நிமிடம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதிலும் ஒருவர் தினமும் 30 நிமிடம் கார்டியோ பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி, மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் வேகமாக கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
Diet Schedule for Weight Loss in Tamil
Source: https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/best-indian-diet-plan-to-lose-weight-in-2-weeks-019225.html
0 Response to "Diet Schedule for Weight Loss in Tamil"
Post a Comment